நியூயார்க்:
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதில் பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார். இதற்கு பதிலடியாக சில நாடுகள் அமெரிக்கா மீது கூடுதல் வரியை விதித்தன.
இந்த நிலையில் டிரம்ப் நிர்வாகத்தின் தேசிய வர்த்தக கொள்கைக்கு எதிராக அமெரிக்காவின் 12 மாகாணங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. நியூ யார்க்கில் உள்ள அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் ஓரிகான், அரிசோனா, கொலராடோ, கனெக்டிகட், டெலாவேர், இல்லினாய்ஸ், மைனே, மினசோட்டா, நெவாடா, நியூ மெக்சிகோ, நியூயார்க் மற்றும் வெர்மான்ட் ஆகிய மாகாணங்கள் வழக்கு தொடர்ந்து உள்ளன.
அதில் அதிபர் டிரம்ப் வகுத்துள்ள கட்டணக் கொள்கை சட்டவிரோதமானது, இது அமெரிக்க பொருளாதாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் அடிப்படையில் டிரம்ப் தன்னிச்சையாக வரிகளை விதிக்க முடியும் என்று கூறுவது தவறானது. வரிகளை விதிக்க பாராளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
அவசரநிலை, வெளிநாட்டில் இருந்து அசாதாரண அச்சுறுத்தல் இருக்கும்போது மட்டுமே அதிபர் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தை செயல்படுத்த முடியும்.
எனவே கட்டணங்களை சட்டவிரோதமானது என்று அறிவிக்கவும், அரசு நிறுவனங்கள் மற்றும் அதன் அதிகாரிகள் அவற்றைச் செயல்படுத்துவதைத் தடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரிசோனா அட்டர்னி ஜெனரல் கிறிஸ் மேயஸ் கூறும்போது, டிரம்பின் கட்டணத் திட்டம் பைத்தியக்காரத்தனமானது. இது பொருளாதார ரீதியாக பொறுப்பற்றது மட்டுமல்ல சட்டவிரோதமானது என்றார்.