சிக்கமகளூரு:
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கோனிபீடு, மாக்கேனஹள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இந்த வனப்பகுதி ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புராவை ஒட்டி உள்ளது. இதனால் சக்லேஷ்புரா வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வனவிலங்குகள் வெளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் அந்தப்பகுதி மக்கள் சொல்லொண்ணா துயரத்தை சந்தித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சக்லேஷ்புரா வனப்பகுதியில் இருந்து 42 காட்டு யானைகள் கோனிபீடு, மாக்கேனஹள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை ஒட்டி உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்தன.
அந்த காட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து அங்குள்ள காபி தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன. அவை வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்கு தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. காபி செடிகளை மிதித்தும், பிடுங்கி எறிந்தும் நாசப்படுத்தி உள்ளன. மேலும் அங்கிருந்த வாழை மரங்களையும் சாய்த்தன. மிளகு செடிகளையும் நாசப்படுத்தின.
அந்தப்பகுதியில் சுமார் 10 ஏக்கரில் உள்ள காபி, வாழை தோட்டங்களை அந்த காட்டு யானைகள் நாசப்படுத்தி உள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும் காட்டு யானைகள் காபி தோட்டங்களில் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள், தங்கள் விளைநிலங்களுக்கு செல்லவே பீதியில் இருந்து வருகிறார்கள். இதுபற்றி அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் வனத்துறையினரும், அங்கு சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அப்போது அந்தப்பகுதி விவசாயிகள், காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்ற வனத்துறையினர், சக்லேஷ்புரா வனப்பகுதியில் இருந்து 42 காட்டு யானைகள் வெளியேறி அட்டகாசம் செய்து வருகின்றன. அவற்றை மீண்டும் சக்லேஷ்புரா வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.