இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 500 கிலோ கிராம் ஹெராயின் போதைப்பொருள் நாளை திங்கட்கிழமை புத்தளத்தில் எரித்து அழிக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில், நீதிமன்ற ஆதாரமாக வைக்கப்பட்டிருந்த மொத்தம் 494.48 கிலோ ஹெராயின் புத்தளம், பாலாவியவில் உள்ள ஒரு சிமென்ட் தொழிற்சாலையில் எரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது 2021 டிசம்பரில் கைப்பற்றப்பட்ட 250.996 கிலோ ஹெராயின் இதில் அடங்கும்.
இதன் மூலம் ஆறு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், 2022 ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட ஏழு வெளிநாட்டினரிடம் இருந்த 243.052 கிலோ ஹெராயின் தொகையும் இதில் அடங்கும்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், நாளை காலை 7.00 மணிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்திலிருந்து ஹெராயின் விடுவிக்கப்பட்டு செய்யப்பட்டு புத்தளத்தில் உள்ள சிமென்ட் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோரின் முன்னிலையில் போதைப்பொருள் அழிக்கப்படவுள்ளது.