ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து திடீரென தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக பேசிய வயநாடு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வாதேரா,
"நம் நாட்டில், இந்த அரசாங்கம் இந்துத்துவாவைப் பற்றிப் பேசுவதைக் காண்கிறோம், சிறுபான்மையினர் சங்கடமாகவும், பதட்டமாகவும் உணர்கிறார்கள்.
நடந்த இந்த பயங்கரவாதச் செயலை நீங்கள் ஆராய்ந்தால், அவர்கள் (பயங்கரவாதிகள்) மக்களின் அடையாளத்தைப் பார்க்கிறார்கள் என்றால், அவர்கள் ஏன் இதைச் செய்கிறார்கள்? ஏனென்றால், நம் நாட்டில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது.
அடையாளங்களைப் பார்த்துவிட்டு ஒருவரைக் கொல்வது பிரதமருக்கு ஒரு செய்தி, ஏனென்றால் முஸ்லிம்கள் பலவீனமாக உணர்கிறார்கள்.
சிறுபான்மையினர் பலவீனமாக உணர்கிறார்கள். நம் நாட்டில் நாம் பாதுகாப்பாகவும் மதச்சார்பற்றவர்களாகவும் உணர்கிறோம் என்பது தலைமையில் இருந்தே வர வேண்டும், அப்போதுதான் இதுபோன்ற செயல்கள் நடப்பதை நாம் பார்க்க மாட்டோம்" என்று தெரிவித்தார்.
இந்த கருத்து குறித்து பாஜக ஐடி பிரிவுத் தலைவர் அமித் மாளவியா, தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது,
"அதிர்ச்சியூட்டுகிறது! சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, பயங்கரவாதச் செயலை வெட்கமின்றிப் பாதுகாக்கிறார். பயங்கரவாதிகளைக் கண்டிப்பதற்குப் பதிலாக அவர்களுக்கு மறைப்பு வழங்குகிறார். அவர் அதோடு நிற்கவில்லை, மாறாக, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் செய்த அட்டூழியங்களுக்கு இந்தியாவின் மீது பழியைப் போடுகிறார்" என்று தெரிவித்தார்.