இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் பல்வேறு வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வியாழக்கிழமைகளில் சிறையில் அவரை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது கட்சி தலைவர்கள் சந்திக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
சமீப காலமாக இம்ரான்கானைச் சந்திக்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறையில் இம்ரான்கானைச் சந்திக்க அவரது சகோதரிகளான அலீமா கான், உஸ்மா கான், நொரீன் கான் மற்றும் அவரது கட்சி தலைவர்கள் நேற்று வந்தனர். ஆனால் போலீசார் அவர்களுக்கு அனுமதி மறுத்து சாலை குறுக்கே கன்டெய்னர்களை போட்டு மறித்தனர். அவர்களை அங்கிருந்து திரும்பிச் செல்லும்படி எச்சரித்தனர். இருப்பினும், இம்ரான்கானின் சகோதரிகள் அங்கிருந்து செல்ல மறுத்தனர்.
இதையடுத்து போலீசார் சகோதரிகள் 3 பேர் மற்றும் இம்ரான்கான் கட்சி தலைவர்கள் சிலரையும் கைது செய்தனர். பின்னர் வாகனத்தில் ஏற்றி சிறையில் இருந்து சற்று தொலைவான பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர்.
ஏற்கனவே கடந்த செவ்வாய்க்கிழமையும் இம்ரான்கானைச் சந்திக்க வந்தபோது, அவரது 3 சகோதரிகளும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.