கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
போராட்ட கும்பல் பல்வேறு இடங்களிலும் பொது சொத்துகளை சூறையாடியது. வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இந்த வன்முறைக்கு 3 பேர் பலியாகினர்.
இதற்கிடையே, மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரரான யூசுப் பதான் பஹராம்பூர் தொகுதி எம்.பி.யாக உள்ளார்.
யூசுப் பதான் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டீ குடிப்பது போன்ற 3 புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் ஒரு புகைப்படத்தில், மதிய நேரத்தில் நல்லதொரு டீ. அமைதியான சூழல். இந்த தருணத்தில் மூழ்கி போயிருக்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.
மேற்கு வங்காளத்தில் வன்முறை சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும்போது அமைதியான பின்னணியில், டீயை மகிழ்ச்சியாக பருகுவது போன்று அவர் வெளியிட்ட இந்தப் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு கண்டனம் தெரிவித்த பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஷாத் பூனாவல்லா வெளியிட்ட செய்தியில், வங்காளம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்துக்களாக பார்த்து கொல்லப்பட்டு வருகிறார்கள். யூசுப் பதான் மகிழ்ச்சியாக டீ பருகி கொண்டிருக்கிறார். இதுவே திரிணாமுல் காங்கிரஸ் கொடுக்கும் முன்னுரிமை. வங்காளம் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது பதான் டீ குடித்து மகிழ்ச்சியாக இருப்பார் என தெரிவித்துள்ளார்.