புதுடெல்லி:
உலகில் உள்ள பண்டைய காலத்து பாரம்பரிய, கலாச்சார நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18-ம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய கலாசார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஏப்ரல் 18-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பாரம்பரிய தினத்தை (நினைவுச் சின்னங்கள் மற்றும் தலங்களுக்கான சர்வதேச தினம்) முன்னிட்டு, இந்தியா முழுவதும் உள்ள இந்தியத் தொல்லியல் துறையின் நினைவுச் சின்னங்களைப் பார்வையிடுவோருக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்று மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
இந்தியாவின் வளமான கலாசார பாரம்பரியத்தை அறிந்து கொள்ள பார்வையாளர்களை ஊக்குவிப்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. தொல்லியல் துறை பாதுகாப்பின் கீழ் 3,698 நினைவுச் சின்னங்கள் மற்றும் தலங்கள் உள்ளன. மத்திய தொல்லியல் துறை நாட்டின் வரலாற்று மரபு மற்றும் கட்டிடக் கலை சிறப்புகளுடன் கூடிய இந்தத் தலங்களை மக்கள் பார்வையிட்டு அவற்றின் சிறப்புகளை அறிந்து கொள்ளும் நோக்குடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்வதன் மூலம் அதிக மக்கள் இந்த தினத்தில் அவற்றை பார்வையிடுவார்கள். இதன்மூலம் நமது பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்கள் தெரிந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.