அமெரிக்க அதிபரின் டொனால்டு டிரம்பின் நிர்வாகத்தில் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் முக்கிய பங்கு வகிக்கிறார். டிரம்ப் புதிதாக தொடங்கிய அரசு செயல்திறன் துறையின் {Department of Government Efficiency (DOGE)} தலைவராக எலான் மஸ்க் உள்ளார்.
இந்த துறை அரசு நிர்வாகத்தை திறமையாக வழி நடத்துவதற்காகவும், அரசு செலவினங்களை குறைப்பதற்காகவும் தொடங்கப்பட்டது. இந்திய பிரதமர் மோடி இந்த வருடம் தொடக்கத்தில் அமெரிக்கா சென்றிருந்தபோது டொனால்டு டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் இன்று எலான் மஸ்க் உடன் டெலிபோனில் பேசியதாகவும் அப்போது டெக்னாலாஜி மற்றும் புதிய கண்டுபிடிப்பில் இருநாட்டு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தோம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பல்வேறு விசயங்கள் குறித்து எலான் மஸ்க் உடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த வருட தொடக்கத்தில் அமெரிக்கா சென்றிருந்தபோது, எலான் மஸ்க் உடன் நடைபெற்ற ஆலோசனையின் போது பேசப்பட்ட அம்சங்களும் இதில் அடங்கும். தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு துறைகளில் ஒத்துழைப்புக்கான மகத்தான சாத்தியக் கூறுகள் பற்றி நாங்கள் விவாதித்தோம். இந்த துறைகளில் அமெரிக்காவுடனான கூட்டாண்மைகளை மேம்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து உறுதியாக உள்ளது.
இவ்வாறு மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.