வெள்ளித்திருப்பூர் பகுதியில் 10 நாட்களாக முகாமிட்டிருக்கும் ஒற்றை யானையால் பொதுமக்கள் அச்சம்

 அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை காரணமாகவும், வெயிலின் தாக்கம் காரணமாகவும் உணவு, தண்ணீரை தேடி யானைகள் அடிக்கடி அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விவசாய விளை நிலங்களை சேதப்படுத்துவதும், பயிர்களை சேதப்படுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது.

இந்நிலையில் அந்தியூர், வெள்ளித் திருப்பூர் அருகே மோத்தங்கல்புதூர் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இரவில் ஒற்றை யானை நடமாடி வருகிறது. பயிர்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்கிறது. விவசாயிகள் விரட்ட முயன்றால் துரத்தி தாக்க முயல்கிறது.

இது தவிர தோட்டத்து பகுதியில் வீட்டை சுற்றி வளர்க்கப்படும் வாழை மரங்களையும் சேதப்படுத்தி வருகிறது. பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சென்னம்பட்டி வன ஊழியர்கள், பொதுமக்களுடன் இணைந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

நீண்ட போராட்டத்துக்கு பிறகு பட்டாசுகளை வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். கடந்த 10 நாட்களில் அய்யன் தோட்டத்தை சேர்ந்த ராஜா, சோமு உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் தோட்டத்தில் நூற்றுக்கணக்கான வாழை, எலுமிச்சை மற்றும் கரும்பை ஒற்றை யானை தின்று சேதப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-, கடந்த 10 நாட்களுக்கு மேலாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் ஒற்றை யானை கிராமத்துக்குள் புகுந்து தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை. எலுமிச்சம்பழம் போன்றவற்றை தின்று சேதப்படுத்தி வருகிறது.

நாங்கள் பட்டாசுகளை கொண்டு விரட்டினாலும் வனப்பகுதிக்குள் செல்லும் யானை மீண்டும் சிறிது நேரத்தில் தோட்டத்துக்குள் புகுந்து விடுகிறது. இதனால் விவசாயிகள் தூக்கத்தை இழந்தும் நிம்மதியை இழந்தும் தவிக்கின்றனர். எனவே வனத்துறையினர் கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form