மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பண்ணையில் செத்து மடிந்த 14 ஆயிரம் கோழிகள்

 சிவகாசி:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா பி.திருவேங்கிடபுரம் கிராமத்தில் ராஜபாளையம் அருகே சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த செல்ல முத்துபாண்டியன் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக அதிநவீன குளிரூட்டப்பட்ட கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.

சுமார் 15,000 கோழிகள் வளர்க்கப்பட்டு வந்த இந்த கோழி பண்ணையில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் ஏற்பட்ட தொழில் பாதிப்பு காரணமாக மின் கட்டணம் செலுத்த முடியாமல் நிலுவைத் மின்கட்டண தொகையாக ரூ.26 ஆயிரத்து 765 இருந்துள்ளது. அதோடு கடந்த மாதத்திற்காண மின் கட்டண தொகை ரூ.22,233 தொகையை செலுத்த வருகிற 20-ந்தேதி வரை கால அவகாசம் இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று கடந்த மாதத்திற்கான மின் கட்டண தொகையை செலுத்துவதற்காக மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றபோது ஏற்கனவே நிலவையில் உள்ள தொகையையும் சேர்த்து செலுத்த மின்வாரிய ஊழியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதையடுத்து கூடுதல் பணத்தை தயார் செய்து மொத்த மின் கட்டண தொகையான ரூ.49 ஆயிரத்து 719-ஐ அவர் செலுத்தியுள்ளார். கட்டணத்தை செலுத்திக் கொண்டிருந்த போதே மின்வாரிய ஊழியர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கோழிப் பண்ணைக்கான மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.

மின் கட்டணத்தை செலுத்தி விட்டு கோழிப் பண்ணைக்கு வந்த போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அங்கிருந்த ஏ.சி. செயல்படாமலும், வெப்பம் தாங்காமலும் 14 ஆயிரம் கோழிகள் ஒன்றன்பின் ஒன்றாக செத்து மடிந்தது. இதைக் கண்டு நிலைகுலைந்த கோழிப்பண்ணை உரிமையாளர் செல்லமுத்து பாண்டியன் செய்வதறியாது திகைத்து நின்றார்.

நிலுவைக் கட்டணத்தை இன்னும் 10 நாட்களில் கோழி விற்பனையானதும் செலுத்துவதாக ஏற்கனவே மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் தான் வேண்டுகோள் விடுத்து இருந்ததாகவும், தன்னிடம் தகவல் தெரிவிக்காமல் மின் இணைப்பை துண்டித்து விடாதீர்கள். அவ்வாறு துண்டித்தால் சிறிது நேரத்திலேயே வெப்பம் தாங்காமல் கோழிகள் இறந்து பெரும் இழப்பு ஏற்படும் என ஏற்கனவே மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் தனது நிலையை கருத்தில் கொள்ளாமல் முன்னறிவிப்பின்றி நிலுவைத் தொகை கட்டணம் செலுத்த வேண்டியதை காரணம் காட்டி மின் இணைப்பை துண்டித்தது விட்டதாக கூறி புலம்பினார்.

இதனால் தனக்கு சுமார் 40 லட்சத்திற்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாவும், தற்போது ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட முடியாமல் தவிக்கும் தனக்கு அரசு கருணை அடிப்படையில் உதவி செய்யவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என அவர் கதறி அழும் வீடியோ காட்சி காண்போரை கண்கலங்கச் செய்கிறது.

மேலும் இச்சம்பவம் குறித்து மின்வாரிய அதிகாரிகள் மீது மாரனேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form