பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் மே 7 அன்று 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.
தொடர்ந்து ஏற்பட்ட மோதல் மே 10 அன்று இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் பதட்டங்கள் முடிவுக்கு வந்தன.
இதற்கிடையே பாகிஸ்தானுடன் ஏற்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியது. இதன்மூலம் பாகிஸ்தானுக்கு துணை ஆறுகள் மூலம் செல்லும் நதிநீர் நிறுத்தப்படுவதால் அந்நாட்டு கடும் தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கும். எனவே நதிநீர் நிறுத்தம் இந்தியாவின் போர் நடவடிக்கை என பாகிஸ்தான் கூறுகிறது.
இந்நிலையில் ஐநா கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி, "தண்ணீர் என்பது உயிர், போரின் ஆயுதம் அல்ல" என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் கடுமையாக பதிலளித்தார்.
சபையில் அவர் பேசுகையில், பாகிஸ்தானின் சதி நடவடிக்கைகள் பொதுமக்களின் உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளன. சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் தவறான தகவல்களை வழங்கியுள்ளது.
1960 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை, பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட மறுநாளே, ஏப்ரல் 22 ஆம் தேதி இந்தியா நிறுத்தி வைத்தது. இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு எல்லை தாண்டிய தொடர்புகள் இருப்பதைக் கண்டறிந்த பிறகு இந்திய அரசாங்கம் நடவடிக்கையை எடுத்தது.
கடந்த ஆறரை தசாப்தங்களாக இந்தியாவிற்கு எதிராக மூன்று போர்களையும் ஆயிரக்கணக்கான பயங்கரவாத தாக்குதல்களையும் நடத்தி, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உணர்வை பாகிஸ்தான் மீறியுள்ளது.
கடந்த நான்கு தசாப்தங்களில் 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பயங்கரவாத தாக்குதல்களில் இறந்துள்ளனர். இந்திய குடிமக்களின் உயிர்கள், மத நல்லிணக்கம் மற்றும் பொருளாதார செழிப்பை பாகிஸ்தான் ஆதரவு பெற்ற எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது
உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமான பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான அதன் ஆதரவை நம்பகத்தன்மையுடனும் முழுமையாகவும் நிறுத்தும் வரை நதிநீர் ஒப்பந்தம் இடைநிறுத்தப்படும்" என்று ஹரிஷ் தெரிவித்தார்.