இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய மாநிலங்களில் ஒன்று தெலுங்கானா. தெலுங்கானா மாநில சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (BCs) 42 சதவீதம் இடஒதுக்கீடு கல்வி அமைப்புகள், வேலைவாய்ப்பு மற்றும் உள்ளாட்சி பதவிகளில் வழங்கும் வகையில் சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் மசோதாவை ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளார். ஜனாதிபதி ஒப்புதல் அளித்தால் மசோதா சட்டமாகும்.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ஒப்புதலுக்கான மசோதாவை அனுப்பி வைத்ததற்காக தெலுங்கானா மாநில ஆளுநர் ஜிஷ்னு தேவ் வர்மாவுக்கு அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள நன்றி தெரிவித்துள்ளனர்.
கவர்னரை சந்தித்த பின், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பூனம் பிரபாகர் கூறுகையில் "சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் 42 சதவீதம் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கும் சட்டம் இந்தியாவுக்கு முன்மாதிரியானது" என்றார்.
மாநில காங்கிரஸ் தலைவர் பி. மகேஷ் குமார் கவுட் "பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் முடிவு வரலாற்று முக்கியத்துவமானது" எனத் தெரிவித்துள்ளார்.