மயிலிட்டியில் தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் போராட்டம்!

 யாழ்ப்பாணத்தில் 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் , சாரதிகள் , நடத்துனர்கள் இன்றைய தினம் (21) முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் , மயிலிட்டி பகுதியில் வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

மயிலிட்டி பகுதியில் இருந்து தமது சேவைகளை ஆரம்பிக்க அனுமதி கோரியே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து புறப்படும் 764 வழித்தட பேருந்துகள் கடந்த காலங்களில், வசாவிளான் சந்தியில் இருந்து , பருத்தித்துறை – பொன்னாலை வீதி வரையிலான பலாலி வீதி உயர்பாதுகாப்பு வலயத்தினுள் காணப்பட்டமையால் ,வசாவிளான் சந்தியுடன் தமது சேவைகளை மட்டுப்படுத்தி இருந்தன.

அதனால் மயிலிட்டி பகுதியில் வசிக்கும் மக்களின் நலன்கருதி , யாழ்ப்பாண நகரில் இருந்து புறப்படும் ,769 வழித்தட பேருந்துகள் மயிலிட்டி வரையில் சேவையில் ஈடுபட்டன.

தற்போது உயர்பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும் பலாலி வீதி திறக்கப்பட்டுள்ளமையால் , யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் 764 வழித்தட பேருந்துகள் யாழ்ப்பாண நகரில் இருந்து புறப்பட்டு பலாலி வீதியூடாக பருத்தித்துறை – பொன்னாலை வீதியை அடைந்து அதனூடாக காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையம் வரையில் சேவையில் ஈடுபடுகிறது.

இந்நிலையில் 769 வழித்தட அனுமதியில் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் தாம் இதுவரை காலமும் மயிலிட்டியில் இருந்து சேவையை ஆரம்பித்தது போன்று ஆரம்பிக்கவும் , யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு , காங்கேசன்துறை வீதி வழியாக மயிலிட்டி வரையில் சேவையில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை 764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களின் பேருந்து சேவைகளை இன்றைய தினத்திலிருந்து காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் இருந்து ஆரம்பிக்குமாறும் அதை மீறிச் செயற்படும் பேருந்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் வடக்கு மாகாணஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form