ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் நிழல் அமைப் பான 'தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்' பொறுப்பு ஏற்றது.
இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இருநாட்டு எல்லையில் போர்ப் பதற்றமும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே மோதல் போக்கை அதிகரிக்க வேண்டாம் என்று இரு நாடுகளையும் அமெரிக்கா கேட்டுக் கொண்டது. இது தொடா்பாக இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடமும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மாா்கோ ரூபியோ பேச்சுவாா்த்தை மேற்கொள்ளவார் என்றும் அமெரிக்கா தெரிவித்தது.
இதேபோல 'இந்தப் பதற்றமான சூழலுக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவாா்த்தை மூலம் அமைதித் தீா்வைக் காண வேண்டும்' என்று இங்கிலாந்தும் அழைப்பு விடுத்தது.
இந்த நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தொலைபேசியில் பேசினார். சில மணி நேரம் இந்த உரையாடல் நடைபெற்றது.
இதேபோல பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பேசினார். இரு நாடுகள் இடையே போர் பதட்டத்தை தணிக்க வேண்டும் என்று இரு நாட்டு தலைவர்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.
பஹல்காமில் நடந்த கொடுரமான பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு தனது வருத்தத்தை ஜெய்சங்கரிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் ஒத்துழைப்பதாக அமெரிக்காவின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியுடன் நான் விவாதித்தேன். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் திட்டமிடுபவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். எல்லை தாண்டி தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப் படும்" என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பேசும்போது காஷ்மீரில் நடந்த தாக்குதலை கண்டித்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த நியாயமற்ற தாக்குதலை விசாரிப்பதற்கு பாகிஸ்தான் அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தெற்காசியாவில் பதற்றத்தை தணிக்கவும், நேரடி தகவல் தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்தவும், அமைதி, பாதுகாப்பை பராமரிக்கவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுமாறு பாகிஸ்தான் பிரதமரிடம் ரூபியோ கேட்டுக் கொண்டார்.