இலங்கையில் இருந்து மீன் ஏற்றுமதி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல்!

 இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்து தொடர்பாக  கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களுக்கும் தென் கொரிய முதலீட்டாளர்கள் குழுவிற்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று   இடம்பெற்றது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது இலங்கையிலிருந்து தென் கொரியாவுக்கு மீன் ஏற்றுமதி செய்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, பிளாஸ்ட் ஃப்ரீஸ் (-20°C) முறையில் பதப்படுத்தப்பட்ட மீன்களுக்கு கொரியாவில் அதிக கேள்வி இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டதோடு  எதிர்காலத்தில், இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்துடன் (CFC) இணைந்து இந்த ஏற்றுமதி செயல்முறையை விரிவுபடுத்துவதற்கான திட்டமொன்றை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தென் கொரியாவின் மீன்பிடித் துறையில் உள்ள வேலைவாய்ப்பு சவால்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தற்போது E-9 விசாவின் கீழ் புறப்படும் பலர் கடலோர சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அல்லாததால், அவர்கள் வேலையை விட்டுவிட்டு சட்டவிரோதமாக தங்கும் போக்கு காணப்படுகிறது எனவும், இந்த நிலையை குறைத்து, மீன்பிடித் துறைக்கு மிகவும் பொருத்தமான நபர்களை அனுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், மீனவ குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு தென் கொரியாவின் மீன்பிடித் துறையில் நிலையான வேலை வாய்ப்புகளை வழங்குவது குறித்து தனியார் முதலீட்டாளர்களுடன் விரிவாகக்  கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சந்திப்பின் போது பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்கள் இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக உயர் தொழில்நுட்பம் மற்றும் அதிக கொள்ளளவு கொண்ட கப்பல்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட கொரிய நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form