நெல்லை:
நெல்லை மாவட்டம் அபிஷேகப்பட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 106 கல்லூரிகள் இயங்கி வருகிறது.
இங்கு 200-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் 107-க்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன.
இந்நிலையில் தற்போது இந்த பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கல்லூரிகளில் 'இண்டஸ்ட்டிரியல் லா' என்ற பாடத்திற்கான தேர்வு இன்று நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 99 மையங்களில் இன்று காலை தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் வந்திருந்தனர்.
தொடர்ந்து மாணவர்கள் தேர்வறைக்குள் வந்ததும் அவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்ட நிலையில் சில நிமிடங்களிலேயே அந்த வினாத்தாள்கள் மாணவர்களிடம் இருந்து திரும்ப பெறப்பட்டன. வினாத்தாள் ஏற்கனவே கசிந்துவிட்டதாகவும், அதனால் இன்று நடைபெற இருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு வினாத்தாள்கள் திரும்ப பெறப்பட்டு விட்டதாகவும் மையங்களில் தேர்வு பணியில் இருந்த ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்த பதிலில், இண்டஸ்ட்டிரியல் லா என்ற பாடத்தின் தேர்வு வினாத்தாள் கசிந்து விட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தேர்வினை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம் என்றனர்.
இதனிடையே வருகிற 29-ந்தேதி வரை கல்லூரிகளில் பருவத்தேர்வுகள் நடைபெற உள்ளது. எனவே தற்போது கசிந்த வினாத்தாளுக்கு பதிலாக வேறு வினாத்தாள் தயாரிக்கப்பட்டு அச்சிடப்படும். அதனை தொடர்ந்து இன்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வு வருகிற 30 அல்லது 31-ந்தேதி நடைபெறும் என்று பல்கலைக்கழக தேர்வாளர்கள் தெரிவித்தனர்.
பல்கலைக்கழக தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வினாத்தாள் கசிந்தது எப்படி?, இதற்கு காரண மானவர்கள் யார்? என்பது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளது.