பீஜிங்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவி ஏற்றதும் பரஸ்பர வரிவிதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டார். ஏப்ரல் 2-ம் தேதி இந்த பரஸ்பர வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்தது.
ஒவ்வொரு முறை அமெரிக்கா சீனா மீது வரி விதித்த போதும், பதிலடியாக, அமெரிக்கா மீது சீனா வரி விதித்தது. தற்போது சீனாவின் மீதான அமெரிக்க வரி 245 சதவீதத்தில் வந்து நின்றது.
மற்ற நாடுகள் ஆலோசனை நடத்தி வந்த நிலையில், 90 நாட்கள் பரஸ்பர வரி விதிப்பை டொனால்டு டிரம்ப் நிறுத்தி வைத்தார்.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. 90 நாள் கெடு ஜூலை 9-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது என்றும், அது குறித்து பரிசீலித்து வருகிறோம் என சீனா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா சமீபத்தில் பலமுறை தொடர்புடைய தரப்பினர் மூலம் சீனாவிற்கு செய்திகளைத் தெரிவிக்க முயன்று வருவதால், சீனா மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகிறது. வரி விதிப்பு பிரச்சனைகள் குறித்து பீஜிங்குடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளது.
சீன அரசு செய்தி தொடர்பாளர், வரி மற்றும் வர்த்தகப் போர்கள் அமெரிக்காவால் ஒருதலைப்பட்சமாகத் தொடங்கப்பட்டன. அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் அது நேர்மையை வெளிப்படுத்த வேண்டும். தவறான நடைமுறைகளை சரிசெய்தல், ஒருதலைபட்ச வரிகளை நீக்குதல் போன்ற பிரச்சனைகளில் தயாரிப்புகளைச் செய்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.