திருவனந்தபுரம்:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதியின் எம்.பி.யுமான சசி தரூர் சமீப காலமாக பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளை புகழும் விதமாக பேசி வருகிறார்.
பாகிஸ்தானுடன் இந்தியா மோதல், அதைத்தொடர்ந்து ஏற்பட்ட சண்டை நிறுத்தம் ஆகியவை தொடர்பாக சசி தரூரின் கருத்துக்கள் காங்கிரஸ் தலைமையின் கருத்துக்கு முரணாக அமைந்திருந்தன.
இதற்கிடையே, தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்த இது நேரமில்லை. கட்சியின் கருத்துக்களைப் பொதுமக்களிடம் முன்வைக்க வேண்டும் என அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியது.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் சசி தரூர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
போர்ச்சூழலில் நான் ஒரு இந்தியனாக பேசினேன். நான் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அல்ல. மத்திய அரசு செய்தி தொடர்பாளரும் அல்ல.
நான் என்ன சொல்கிறேனோ அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம். அதில் உடன்பாடு இல்லை என்றால் என்னை தனிப்பட்ட முறையில் குறை கூறலாம், பரவாயில்லை.
எனது தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்துகிறேன் என்பதை மிகத்தெளிவாகக் கூறிவிட்டேன். சர்வதேச அளவில் மிகவும் முக்கியமான ஒரு நேரத்தில், நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்திருக்க வேண்டிய தருணத்தில், நாட்டுக்கான எனது பங்களிப்பு இது. என் கருத்தை ஏற்பதும் நிராகரிப்பதும் கேட்பவரின் விருப்பம் என தெரிவித்தார்.