பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நள்ளிரவு 1.05 முதல் 1.30 வரை 25 நிமிடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய முப்படைகள் தாக்குதல் நடத்தின. 26 முறை துல்லியமாக நடத்தப்பட்ட தாக்குதலில் முகாம்கள் அழிக்கப்பட்டு முக்கிய பயங்கரவாதிகள் உள்பட 70 பேர் கொல்லப்பட்டனர்.
இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் குறைந்த 12 பேர் உயிரிழந்தனர். 57-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள குருத்வாரா மீது பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஷிரோமணி அகாலி தளம் கட்சி தலைவர் சுக்பீர் சிங் பாதல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுக்பீர் சிங் பாதல் தனது எக்ஸ் பக்க பதிவில் "பூஞ்சில் உள்ள புனித மத்திய குருத்வாரா ஸ்ரீ குரு சிங் சபா சாஹிப் மீது பாகிஸ்தான் படைகள் நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதில் அப்பாவியான பாய் அமிரிக் சிங் ஜி, பாய் அமர்ஜீத் சிங், பாய் ரஞ்சித் சிங் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்
தியாகிகளின் தியாகத்திற்காக அவர்களை கௌரவிக்க வேண்டும் என்றும், துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பங்களுக்கு அவர்களின் துயர நேரத்தில் ஆதரவளிக்க போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்.
சீக்கியர்கள் எப்போதும் நாட்டின் வாள் கரமாக இருந்து வருகின்றனர், தொடர்ந்து இருப்பார்கள். நாங்கள் எங்கள் ஆயுதப் படைகளுடன் ஒரு பாறை போல நிற்கிறோம். சிரோமணி அகாலி தளமும் நமது நாடும் அமைதிக்காக நிற்கின்றன என்றாலும், எதிரியால் நமது கவுவரத்திற்கு சவால் விடுக்கப்பட்டால், நமது தேசபக்தி கடமைகளை நிறைவேற்ற நமக்கு எந்த நினைவூட்டலும் தேவையில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.