ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குலுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது. அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நிதி நீர் ஒப்பந்தம் சஸ்பெண்ட் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இருநாட்டு தலைவர்களும் ராணுவ தளபதியுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் ஏற்படலாம் என பற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அந்நாட்டின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ தலைமையகத்திற்கு சென்றார். அவருடன் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார், பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் மற்றும் பல உயர் அதிகாரிகள் சென்றனர்.
நாட்டின் பாதுகாப்பு முன்னேற்றம் குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அப்போது இந்தியாவில் இருந்து வரும் அச்சுறுத்தல், ராணுவத்தின் நிலை, போர் வியூகம் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஐஎஸ்ஐ தலைவைர் முகமது ஆசிம் மாலிக், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.