தேர்வு மையத்தில் மாணவர்களின் பூணூலை வெட்டிய விவகாரத்தில் 2 ஊழியர்கள் பணியிடை நீக்கம்

 சிவமொக்கா:

கர்நாடக அரசு தேர்வாணையம் சார்பில் என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு (சி.இ.டி.) நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான சி.இ.டி. நுழைவுத் தேர்வு கடந்த 15-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரை நடந்து முடிந்தது. இதில் மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இந்த தேர்வில் ஆள்மாறாட்டம், காப்பி அடிப்பதை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. ஜீன்ஸ் பேண்ட், முழுக்கை சட்டை அணிந்து வர தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் மாணவிகள் கம்மல், சங்கிலி அணிந்து வரவும், ஷூ அணிந்து வரவும், மின்னணு சாதனங்கள் எடுத்துச் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த கெடுபிடிகளால் மாணவ- மாணவிகள் கடும் அதிருப்தியை தெரிவித்தனர்.

இந்த நிலையில் 17-ந்தேதி நடந்த இறுதித் தேர்வின் போது பீதர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவரிடம், அதிகாரிகள் பூணூலை கழற்ற கூறியுள்ளனர். ஆனால் அவர் பூணூலை கழற்ற மறுத்துவிட்டார்.

இதனால் அவரை அதிகாரிகள் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர் தேர்வு எழுதாமல் அங்கிருந்து சென்றுவிட்டார். இதுபற்றி கர்நாடக தேர்வாணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த மாணவருக்கு நியாயம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.

இதேபோல் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி சராவதி நகர் ஆதிசுஞ்சனகிரி பி.யூ. கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் 2 மாணவர்களின் பூணூலை ஊழியர்கள் வலுக்கட்டாயமாக வெட்டி அகற்றினர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிராமணர் சமுதாய சங்கம் சார்பில் அதன் தலைவர் ரகுநாத், முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார். மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டு இருப்பதாக மந்திரி எம்.சி.சுதாகர் தெரிவித்து இருந்தார்.

மேலும் இச்சம்பவம் குறித்து கர்நாடக தேர்வாணைய இயக்குனரும் வருத்தம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தீர்த்தஹள்ளியில் மாணவர்களின் பூணூலை கத்தரிக்கோல் வைத்து வெட்டி வீசியதாக கூறியும், இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்த்தஹள்ளி போலீசில் பிராமண மகாசபா தலைவர் நடராஜ் பாகவத் புகார் அளித்திருந்தார்.

அதன்பேரில் தீர்த்தஹள்ளி போலீசார், அந்த மாணவர்களின் பூணூலை வெட்டிய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்த சம்பவத்தை கண்டித்தும், மாணவர்களின் பூணூலை வெட்டி அகற்றி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் நேற்று மாநிலம் முழுவதும் பிராமணர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் பா.ஜ.க.வினர் மற்றும் இந்து அமைப்பினரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும், முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பாக சிவமொக்கா மாவட்ட கலெக்டர் குருதத்த ஹெக்டே விசாரணை நடத்தினார். மேலும் தேர்வு மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தார். அதில் 2 மாணவர்கள் தேர்வு மையத்திற்கு தேர்வு எழுதுவதற்காக வருவதும், அவர்களை ஊர்க்காவல் படையினர் தடுத்து நிறுத்தி சோதனையிடுவதும் தெரியவந்தது.

அப்போது ஊர்க்காவல் படையினர் 2 பேர், அந்த 2 மாணவர்களிடமும் பூணூலை கழற்ற சொல்லி நெருக்கடி கொடுப்பதும், இல்லையேல் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவிப்பதும் பதிவாகி இருந்தது.

ஆனால் பூணூலை கழற்ற மாணவர்கள் மறுத்ததும், அதனை ஊர்க்காவல் படையினர் 2 பேரும் தங்கள் கைகளில் இருந்த கத்தரிக்கோலால் வெட்டி அகற்றுவதும், இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்படுவதும் தெரியவந்தது. உடனே தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்த பி.யூ. கல்லூரி நிர்வாகிகள் தலையிட்டு ஊர்க்காவல் படையினர் மற்றும் மாணவர்களை சமரசம் செய்து தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கிறார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் மாணவர்கள் அணிந்திருக்கும் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் அணிகலன்களை வைத்து அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று ஊர்க்காவல் படையினரிடம் கல்லூரி நிர்வாகிகள் அறிவுறுத்துவதும் தெரியவந்தது.

இந்த ஆதாரத்தின் அடிப்படையில் இவ்விவகாரத்தில் ஊர்க்காவல் படையினர் 2 பேர் தவறு செய்திருப்பது உறுதியானதால், அவர்கள் 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் குருதத்த ஹெக்டே உத்தரவிட்டுள்ளார்.

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form