கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து சிதறியதில் 4 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு

  ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி திரவுபதி அம்மன் கோவில் திருவிழா 27 ஆண்டுகளுக்கு பிறகு நடந்து வருகிறது. இந்த விழாவில் 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொள்வார்கள். இதனால் கஞ்சநாயக்கன்பட்டி, பூசாரிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் விழாக்கோலம் பூண்டு இருந்தது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே ஒவ்வொரு கிராம மக்கள் மட்டும் அல்லாமல் தனிப்பட்ட குழுவாகவும் பட்டாசுகள் வாங்கி கோவில் விழாவில் ஆங்காங்கே மக்கள் வெடிப்பார்கள்.

அந்த வகையில் கஞ்சநாயக்கன்பட்டி பக்கத்து ஊரான கோட்டமேடு பகுதியை சேர்ந்த செல்வராஜ், லோகநாதன் உள்பட 3 பேர் தாரமங்கலம் அருகே சின்னப்பம்பட்டிக்கு சென்று பட்டாசுகளை வாங்கியதாக தெரிகிறது. அந்த பட்டாசுகளை ஒரு மூட்டையில் கட்டி மொபட்டில் கஞ்சநாயக்கன்பட்டிக்கு கொண்டு வந்தனர்.

பூசாரிப்பட்டியில் இருந்து கஞ்சநாயக்கன்பட்டிக்கு சாமி ஊர்வலம் சென்றது. அப்போது மேளதாளம் முழங்க சீர்வரிசை பொருட்கள் எடுத்து செல்லப்பட்டன. இந்த நிலையில் சாலையோரம் பற்றி எரிந்த தீயில், செல்வராஜ் சென்ற மொபட் பட்டாசுகளுடன் திடீரென நிலைதடுமாறி சாய்ந்து விழுந்தது.

இதில் மூட்டையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதனால் அந்த பகுதியில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். பட்டாசு வெடித்து சிதறியதில் செல்வராஜ் உள்பட 8 பேர் சிக்கிக் கொண்டனர். இதில் செல்வராஜ் மற்றும் 12 வயது சிறுவன் உள்பட 4 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உடல் சிதறி பலியான 4 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form