நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, அடுத்த ஆண்டு (2026) நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார். இதற்காக அவர் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கை நடத்த உள்ளார்.
அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த த.வெ.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவை அருகே குரும்பபாளையத் தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இதில் ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுக்கு இன்றும், கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகளுக்கான கருத்தரங்கு நாளையும் மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கோவையில் முகாமிட்டு செய்து வருகிறார்.
கருத்தரங்கில் பங்கேற்பதற்காக த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 9 மணிக்கு கோவை வருகிறார். அவருக்கு கோவை விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுக்க உள்ளனர். அதை ஏற்றுக் கொள்ளும் அவர், கோவையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வு எடுக்கிறார்.
அதன்பிறகு அவர் மதியம் 3 மணிக்கு கருத்தரங்கு நடைபெறும் இடத்துக்கு காரில் செல்கிறார். அங்கு அவர், கருத்தரங்கில் பங்கேற்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசுகிறார்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 3 மணிக்கு நடைபெறும் கருத்தரங்கிலும் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் பேசுகிறார். இதனிடையே, இன்று கோவை வரும் விஜய் ரோடு ஷோ மேற்கொள்கிறார்.
2 நாட்கள் நடைபெறும் கருத்தரங்கிலும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த கருத்தரங்கில் த.வெ.க.வை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இதற்காக முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இது குறித்து கட்சி நிர்வாகிகள் கூறும்போது, கோவையில் 2 நாட்கள் நடைபெறும் கருத்தரங்கில் தலா 8 ஆயிரம் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். இதில் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அனுமதி கிடையாது.
12 ஆண்டுகளுக்கு பிறகு கருத்தரங்கில் பங்கேற்க தலைவர் விஜய் இன்று கோவை விமான நிலையம் வருவதால், அங்கு அவரை வரவேற்க நிர்வாகிகள் திரண்டு வர வேண்டும் என்றனர்.