சென்னை:
ஊட்டி, கொடைக்கானலுக்கு கோடை காலத்தில் அதிக அளவு சுற்றுலா வாகனங்கள் வருவதால் உள்ளூர் மக்கள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகினர். வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர், ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் முறையை கட்டாயமாக்கி உத்தரவிட்டனர்.
இதற்கு எதிரான வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காணொலி காட்சி வாயிலாக ஆஜரான நீலகிரி கூடுதல் கலெக்டர், கோடை காலத்தில் ஊட்டியில் மலர், பழம், காய்கறி, ரோஜா கண்காட்சிகள் நடைபெறும். அதனால், சுற்றுலா வாகனங்களுக்கு கூடுதல் அனுமதி வழங்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கும், கல்லூரி, பள்ளி மாணவர்களின் கல்விச்சுற்றுலா வாகனங்களுக்கும் இ-பாஸ் வழங்கும் முறையில் முன்னுரிமை வழங்கவேண்டும்.
மலர் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் மே மாதம் 3-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை பல்வேறு தேதிகளில் நடைபெற உள்ளதால், இந்த கண்காட்சிகள் நடைபெறும் தினங்களில் மட்டும், ஊட்டிக்கு கூடுதலாக 500 சுற்றுலா வாகனங்களுக்கும், கொடைக்கானலுக்கு கூடுதலாக 300 வாகனங்களுக்கும் இ-பாஸ் வழங்கலாம்.
வெளிமாவட்ட பதிவு எண்களை கொண்ட வாகனங்களை வைத்திருக்கும் உள்ளூர்வாசிகளிடம் முறையான ஆவணங்களை பெற்று பரிசோதித்து, உள்ளூர் வாகன இ-பாஸ் வழங்கலாம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.