சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை ஏ.சி. வசதியுள்ள மின்சார ரெயில் சேவை கடந்த 19-ந்தேதி தொடங்கியது. சென்னையில் வெயில் கொளுத்தி வரும் வேலையில் ஏ.சி. மின்சார ரெயிலுக்கு பயணிகள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த ரெயில் காலை 7 மணிக்கு கடற்கரையில் இருந்து தொடங்கி துறைமுகம், பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கபெருமாள்கோவில், பரனூர் ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக 8.35 மணிக்கு செங்கல்பட்டு செல்லும்.
மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கு கிளம்பி 10.30 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
பின்னர், கடற்கரையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு 5.25 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. பின்னர், இரவு கடற்கரையில் இருந்து 7.35 மணிக்கு புறப்பட்டு 8.30 மணிக்கு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. நாள்தோறும் 3 சேவைகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று மதியம் இயக்கப்படும் ஏ.சி. மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை - செங்கல்பட்டுக்கு பிற்பகல் 3.45 மணிக்கு செல்லும் ஏ.சி. பெட்டி கொண்ட மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.