தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அமைச்சரவையில் 7வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சில அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு, பதவியில் இருக்கும் அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டுள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கில் ஜாமினா? அமைச்சர் பதவியா ? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதேபோல், வனத்துறை அமைச்சராக இருந்த பொன்முடியும், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
சைவம், வைணவம் என குறிப்பிட்டு பெண்களை இழிவாக பேசியதால் பொன்முடிக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்களுக்கு, செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் முத்துச்சாமிக்கு மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொன்முடி வகித்த வனத்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடுத்லாக கைத்தறித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் மனோ தங்கராஜ் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். மனோ தங்கராஜூக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகா குறித்து அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், ஆளுநர் மாளிகையில் நாளை மாலை 6 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
அமைச்சர்களாக இருந்த செந்தில் பாலாஜி, பொன்முடியின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.