திருவனந்தபுரம்:
கேரள மாநில பாஜக கட்சியின் துணைத் தலைவர் ஷோபா சுரேந்திரன். இவர் முன்னாள் மாநில தலைவர் சுரேந்திரனின் மனைவி ஆவார். இவர்களது வீடு திருச்சூர் அய்யந்தோல் பகுதியில் இருக்கிறது.
இங்கு நேற்று முன்தினம் இரவு பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவல் கிடைத்ததும் கட்சியினர் அங்கு குவிந்தனர். யாரோ வெடிபொருட்களை வீசிச் சென்றதாக கூறப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றியும் ஆய்வு செய்தனர்.
இதில் ஷோபா சுரேந்திரன் வீடு அருகே வெடி பொருள் எதுவும் வீசப்படவில்லை. அந்த பகுதியில் சிலர் பட்டாசு வெடித்து உள்ளனர் என தெரிய வந்தது. இந்த சம்பவம் திட்டமிட்டு நடந்ததில்லை என்ற போதிலும் சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.