சஜித் பிரேமதாசவை காட்டிலும் நாமல் ராஜபக்ஷ முன்னிலையில்! - மொட்டு கட்சி வெளியிட்ட தகவல்

 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார மேடைகளில் உரையாற்றுவதை தவிர பதவிக்கான கடமைகளில் தற்போது ஈடுபடுவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை அவர் குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன அக்காலப்பகுதிகளில் இடம்பெற்ற தேர்தல்களில், மேடை ஏறி தனது கட்சியை பிரபல்யப்படுத்தவில்லை. பதவிக்கான கௌரவத்துடன் செயற்பட்டார்.

அதேபோல் 2020ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ அதே ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தல் பிரச்சார மேடைகளில் ஏறவில்லை.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சார மேடைகளில் ஏறி தொடர்ந்து பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.

கட்சிக்காக பிரச்சாரம் செய்வதை முன்னிலைப்படுத்திக்கொண்டு செயற்படுகிறார். அரச தலைவருக்கான பொறுப்புக்களை மறந்துவிட்டு செயற்படுகிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை காட்டிலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்  நாமல் ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதிகளவான உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளை நாங்கள் கைப்பற்றுவோம். என்றார்.


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form