காங்கிரஸ்க்கு முஸ்லிம்கள் மீது உண்மையிலேயே அனுதாபம் இருந்தால், முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரை கட்சி தலைவராக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு 50 சதவீதம் இடம் அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார். சமரச அரசியலைத் தவிர காங்கிரஸ் கட்சிக்கு வேறு எதுவும் கிடையாது என விமர்சித்தார்.
மேலும், "அம்பேத்கரின் அரசியலமைப்பில் மதம் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என உள்ளது. ஆனால், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு ஒப்பந்தங்களை மத அடிப்படையில் வழங்கி, எஸ்சி, எஸ்டி, ஓபிசி-க்களின் உரிமையை பறித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களில் ஒரு சில அடிப்படைவாதிகளுக்காக திருப்திப்படுத்தும் கொள்கையை காங்கிரஸ் செய்து வந்தபோது, அதே மதத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் புறக்கணிக்கப்பட்டவர்களாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும், ஏழைகளாகவும் இருந்தனர்.
இதற்கு மிகப்பெரிய சான்று, 2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வக்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததுதான்.
அவர்களுக்கு உண்மையிலேயே முஸ்லிம்கள் மீது அனுதாபம் இருந்தால், காங்கிரஸ் கட்சியின் தலைவரை முஸ்லிம் மதத்தில் இருந்து நியமனம் செய்ய வேண்டும். அதை அவர்கள் ஏன் செய்யவில்லை?.
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, கோரிக்கையை நிறைவேற்றுவதாக சொல்வார்கள். ஆனால், அவர்கள் (காங்கிரஸ்) அதை செய்ய மாட்டார்கள். காங்கிரஸில் இருந்து எதையும் செய்யமாட்டார்கள். ஆனால், குடிமக்களின் உரிமையை அவர்களிடம் இருந்து பறிப்பார்கள்" என்றார்.