திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை என்பதால் கடந்த 4 நாட்களாக கட்டுக்கடங்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காத்திருப்பு அறைகள் அனைத்தும் பக்தர்கள் கூட்டத்தால் நிறைந்தது. சுமார் 2 கிலோமீட்டர் தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
திருப்பதி மலை முழுவதும் பக்தர்கள் காணப்பட்டனர். இதனால் இலவச நேரடி தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். இன்று காலை பக்தர்கள் கூட்டம் படிப்படியாக குறைந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி 7 அறைகளில் மட்டுமே பக்தர்கள் காத்திருந்தனர். இதனால் விரைவாக தரிசனம் செய்து வருவதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா காலத்திற்கு முன்பு அலிபிரி நடைபாதையில் 14 ஆயிரம் டோக்கன்களும், ஸ்ரீவாரி மெட்டு நடை பாதையில் 6 ஆயிரம் நேர ஒதுக்கீட்டு டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. இதனால் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்து வந்தனர்.
கொரோனா காலத்தில் நடைபாதையில் டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டது. மீண்டும் நேர ஒதுக்கீடு டோக்கன்களை வழங்க வேண்டும் என பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதியில் நேற்று 82,746 பேர் தரிசனம் செய்தனர். 25.078 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.85 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.