வெண்டிலேட்டர் சிகிச்சையில் அசைய முடியாமல் இருந்த பெண்.. பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்

 அரியானாவில் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்த பெண்ணை ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காவல்துறையினரின் கூற்றுப்படி, சர்வதேச விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணிபுரியும் 46 வயது பெண், பயிற்சிக்காக அண்மையில் குருகிராமிற்கு வந்திருந்தார், ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அவர் தங்கியிருந்தார். ஹோட்டல் நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது மூழ்கிய அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆரம்பத்தில் அவர் ஒரு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஏப்ரல் 5 ஆம் தேதி, மேதாந்தா என்ற ஒரு பெரிய தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அப்பெண் அளித்த புகாரின்படி, ஏப்ரல் 6 ஆம் தேதி, மருத்துவமனையில் அரை மயக்க நிலையில் வென்டிலேட்டர் சிகிச்சையில் தான் வைக்கப்பட்டு, மருத்துவமனை படுக்கையில் அசையாமல் படுத்திருந்தபோது, மருத்துவமனை ஆண் ஊழியர் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்வதை உணர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், என்ன நடக்கிறது என்பதை தன்னால் உணர முடிந்தது என்றும் ஆனால் அசையவோ, குரல் எழுப்பவோ முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி , அந்த நேரத்தில் இரண்டு பெண் செவிலியர்கள் அங்கு இருந்ததாகவும், அவர்கள் நடந்ததை தடுக்க எதுவும் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, தனது கணவரிடம் தனக்கு ஏற்பட்ட துயரத்தை அவர் விவரித்துள்ளார். இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பதாக மேதாந்தா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 




Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form