எம்.ஜி.ரோடு:
பெங்களூரு நகரில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதுபோன்ற சாலைகளை சரி செய்யாமல் மாநகராட்சி இருந்து வருகிறது. தார் சாலை அமைப்பதால், மழை உள்ளிட்ட காரணங்களால் தார் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி வருவதால், மாநகராட்சி சார்பில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் அந்த கான்கிரீட் சாலைகளும் குண்டும், குழியுமாக மாறிவருகிறது. அதுபோல், எம்.ஜி.ரோடு அருகே உள்ள கருடாமால் ரோடும், கான்கிரீட் சாலையாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றி அமைக்கப்பட்டது. அந்த கான்கிரீட் சாலையும் தற்போது மோசமாக மாறி உள்ளது.
அந்த சாலை தற்போது கரடு, முரடாகவும், ஜல்லி கற்களாகவும், குழியாகவும் மாறிபோய் உள்ளது. ஒரு இடத்தில் மட்டும் அவ்வாறு இல்லை. அந்த சாலை முழுவதுமே ஜல்லி கற்களாகவும், குழிகள் விழுந்தும், இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் விதமாக அபாயகரமாகவும் காணப்படுகிறது.
அந்த சாலையில் சென்று வருவதற்கு வாகன ஓட்டிகள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் கொஞ்சம் கவனக்குறைவாக சென்றாலும், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைவது நிச்சயம்.
சாலையோரம் போடப்பட்டுள்ள நடைபாதை சிமெண்டு சிலாப்புகளும் உடைந்து போய் கிடக்கிறது. இதனால் பாதசாரிகளால் நடந்து கூட செல்ல முடியவில்லை.
சில வளர்ச்சி பணிகளுக்காக கான்கிரீட் ரோட்டில் குழிகள் தோண்டியதால், இவ்வாறு மாறி இருப்பதாகவும், இதை சீரமைக்க மாநகராட்சியிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே ஜல்லி கற்களாக காட்சி அளிக்கும் கான்கிரீட் சாலையை சீரமைக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.