ஜம்மு காஷ்மீரில் குட்டி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட லஷ்கர் இ தொய்பா உடைய கிளை அமைப்பு பொறுப்பேற்றது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் விசா ரத்து என உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது.
சிம்லா ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் வான்பரப்பை இந்திய விமானங்கள் பயன்படுத்த தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை பாஸ்கிதான் மேற்கொண்டது.
மேலும் இரு நாடுகளுக்கிடையே சண்டை மூளுவதற்கான பதற்றமும் எல்லையில் நிலவி வருகிறது. பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப், "இந்திய ராணுவம் விரைவில் ஊடுருவும்; நாங்கள் தயாராக உள்ளோம்" என்று பேசியிருக்கிறார்.
மேலும் கவாஜா ஆசிப் பேட்டி ஒன்றில், பல தசாப்தங்களாக பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளித்து ஆதரவு அளிப்பதாக அண்மையில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தை ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியா எழுப்பியுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையில், இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி யோஜ்னா படேல் பேசியதாவது,
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளித்து ஆதரித்ததாக வாக்குமூலம் அளித்து இருக்கிறார். அவரது இந்த பேச்சு யாருக்கும் ஆச்சரியம் கொடுக்கவில்லை. உலகளாவிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு மோசமான நாடு பாகிஸ்தான் என்பதை அது அம்பலப்படுத்தி உள்ளது.
பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு, பயிற்சி மற்றும் நிதியுதவி அளித்ததை ஒப்புக்கொண்டதை உலகம் முழுவதும் மக்கள் கேட்டனர்.
2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதலுக்குப் பிறகு, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாதம் எல்லா வகையிலும் கண்டிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்" என்று தெரிவித்தார்.