ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரையிலான எல்லை ஒட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதனை இந்திய ராணுவம் உடனடியாக தாக்கிஅழித்தது.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரியானாவின் அம்பாலா, பஞ்சகுலா, பஞ்சாப்பின் பிரோஸ்பூர், ராஜஸ்தானின் ஜெய்சால்மர், காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. காஷ்மீரில் வான் பாதுகாப்பு கவசம் செயல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவின் 14 நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் 26 டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த டிரோன்கள் இந்திய வான் பாதுகாப்பு மையம் மூலம் தடுத்து அழிக்கப்பட்டன.
பதான்கோட், அக்னூர், பாராமுல்லா, அவந்தி நகர், அவந்திபோரா, பெரோஸ்பூர் உள்ளிட்ட 14 நகரங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இதையடுத்து, சைரன் ஒலிக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடம் நோக்கி செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
பெரோஸ்பூரில் வீசப்பட்ட டிரோன் தாக்கியதில் அங்கிருந்த வீடுகள் தீப்பற்றின. இதில் காயமடைந்த 3 பேரை ராணுவத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பாகிஸ்தான் தாக்குதலை சமாளிக்கும் வகையில் இந்திய ராணுவம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.