118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 9 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு தென்காசி மாவட்டம் முழுவதும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தாழ்வான இடங்களில் இருந்து மக்கள் வெளியேற மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்தினால் வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வந்த நிலையில் 2 நாட்களாக பிற்பகலில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை முதலே பெரும்பாலான இடங்களில் வானம் மேக மூட்டமாகவும், ஆங்காங்கே சாரல் மழையும் பெய்து வருவதால் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அதிகாலை முதலே சில இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது. மேலும் நேற்று மாலையில் இருந்து பரவலாக தென்மேற்கு பருவக்காற்று வீச தொடங்கி உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து தொடங்கி உள்ளது. மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நேற்று வரை நீர்வரத்து சுத்தமாக இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் மழை பெய்ததன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,328 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 500 கனஅடி நீர் வினாடிக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இன்று ஒரே நாளில் 1¼ அடி உயர்ந்து 83 அடியாக உள்ளது. அங்கு 21 மில்லிமீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 9 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 49.65 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 45 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதே நேரம் வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு உள்ளிட்ட அணை பகுதிகளில் மழை ஏதும் இல்லாததால் நீர் வரத்து இல்லை.
புறநகர் பகுதிகளில் நேற்று இரவு சேரன்மகாதேவி, முக்கூடல், வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பை சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இன்று காலை அம்பை, கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டதோடு குளிர்ந்த காற்று வீசியதால் ரம்மியமான சூழ்நிலை நிலவியது.
மாஞ்சோலை வனப்பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்கு ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கி உள்ளனர். பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டனர்.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அடவிநயினார், குண்டாறு, கடனா மற்றும் ராமநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று மாலையில் இருந்து இன்று அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தென்காசி நகர் பகுதி, செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளான புளியரை, தெற்குமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. அடுத்த 2 நாட்களுக்கு தென்காசி மாவட்டம் முழுவதும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தாழ்வான இடங்களில் இருந்து மக்கள் வெளியேற மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் கோவில் அணையில் 52 மில்லிமீட்டரும், குண்டாறில் 44 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 23.50 மில்லிமீட்டரும் மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.