உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் நேற்றோடு நிறைவு பெற்றது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய்க்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார். வரும் நவம்பர் மாதம் ஓய்வுபெறும் வரை 6 மாத காலம் அவர் இந்த பதவியில் தொடர்வார்.
இதன்மூலம் உச்சநீதிமன்றத்தில் பட்டியலின பிரிவைச் சேர்ந்த 2 ஆவது தலைமை நீதிபதி என்ற பெருமையை பி.ஆர்.கவாய் பெற்றுள்ளார். பி.ஆர்.கவாய் புத்த மதத்தை பின்பற்றுபவர்
2007 முதல் 2010 வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு, இந்தியாவின் இரண்டாவது தலித் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பொறுப்பேற்றுள்ளார்.
பி.ஆர்.கவாய் 1960ஆம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் பிறந்தவர். 1985 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.
2003 ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்பு 2005 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்பு 2019-ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்