மாவோயிஸ்டுகளை கூண்டோடு ஒழித்துக் கட்ட நாடு முழுவதும் மத்திய பாதுகாப்பு படையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மண்டலத்தில் பாதுகாப்பு படையினரின் அதிரடி வேட்டையில் 27 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் முக்கிய தலைவர் பசவராஜ் கொல்லப்பட்டார்.
70 வயதான பசவ ராஜு, இந்தியாவின் மிகவும் தேடப்படும் மாவோயிஸ்டு தலைவர்களில் ஒருவராக இருந்தார். அவரது தலைக்கு ரூ. 10 கோடி வரை பரிசு அறிவிக்கப்பட்டது.
இவரைப் போலவே ஜன்முக்தி பரிஷத் என்ற மாவோயிஸ்டு இயக்கத்தின் முக்கிய தலைவர்களான பப்பு லோஹாரா மற்றும் பிரபாத் கஞ்சு ஆகியோரை பாதுகாப்பு படையினர் தேடி வந்தனர்.
பப்பு லோஹாரா தலைக்கு ரூ.10 லட்சம் பிரபாத் கஞ்சு தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலம் லதேகர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளை இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது கடுமையான துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இந்த மோதலில் மாவோயிஸ்டு முக்கிய தலைவர்களான பப்பு லோஹாரா மற்றும் பிரபாத் கஞ்சு இருவரும் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்த மோதலின் போது மாவோயிஸ்டு ஒருவரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அந்த பகுதியில் மாவோயிஸ்டுகள் வேட்டை நடந்து வருகிறது.