வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களாக மாறிய பாராளுமன்ற துணை ராணுவப் படையினருக்கும் (RSF) இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
இந்த போரில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 1.3 கோடி மக்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை), வடக்கு கோர்டோஃபான் மாநிலத்தின் தலைநகரான எல்-ஓபெய்டில் உள்ள ஒரு சிறைச்சாலையின் மீது RSF ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டதாகவும், 45 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நகரம் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது. RSF தாக்குதல்கள் இங்கு நிலைமையை மேலும் மோசமாகியுள்ளன.
முன்னதாக வெள்ளிக்கிழமை மாலை, டார்பூரில் நடந்த வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் RSF ஆல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல்களுக்கு முன்னர், இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தலைநகரான போர்ட் சூடானில், RSF தொடர்ந்து ஆறு நாட்கள் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்களில் முக்கியமான உள்கட்டமைப்புகள் சேதமாகின. இவற்றில் மின்சார கட்டமைப்பு மற்றும் சிவில் விமான நிலையம் ஆகியவை அடங்கும்.