பிரதமர் மோடி தலைமையில் இன்று மதியம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார்.
அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராகுல் காந்தி, "சாதிவாரி கணக்கெடுப்பு என்ற காங்கிரஸின் கொள்கையை பாஜக அரசு ஏற்றுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நெருக்கடிக்கு மத்திய அரசு பணிந்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் 90% மக்கள் அதிகார பொறுப்பை ஏற்பார்கள். இடஒதுக்கீடு வரம்பை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ரத்த வேண்டும்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு எங்களுடைய இலக்கு. பாஜக அரசு அதை ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. 4 சாதி மட்டுமே இருக்கிறது எனக் கூறி வந்த மோடி, 11 ஆண்டுகளுக்குப் பிறகு இதை அறிவித்துள்ளார்.
11 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென ஞானோதயம் வந்து மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை கொண்டுவந்துள்ளது. ஆனால் என்ன காரணத்திற்காக தற்போது அறிவிப்பு என்பது தெரியாது. காங்கிரசின் தேர்தல் அறிக்கையை, காங்கிரசின் முன்னெடுப்பை ஏற்று மத்திய அரசு இதனை அறிவித்துள்ளது" என்று தெரிவித்தார்.
1931ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி 4,147 சாதிகள் இருந்ததாக புள்ளி விவரத்தில் தகவல். தற்போது வரை 1931ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி இட ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டில் சமூக பொருளாதார ரீதியில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் புள்ளி விவரங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.