திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ. 500 கோடியில், 1.54 லட்சம் சதுர அடியில், 10 மாடிகள் கொண்ட அதிக நவீன பஸ் நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
பஸ் நிலையம் அமைக்க ஆந்திர மாநில அரசு போக்குவரத்து துறைக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை தளவாட மேலாண்மை இதற்கான நிதியை வழங்குகிறது.
தனியார் ஒப்பந்ததாரர் மூலம் இந்த பணிகள் நடைபெற உள்ளது.
தற்போது உள்ள பஸ் நிலையத்தில் 3 பக்கங்களில் சாலைகள் உள்ளன தற்போது
கட்டப்பட உள்ள நவீன பஸ் நிலையத்தில் 4 பக்கம் சாலைகள் கொண்டதாக
வடிவமைக்கப்படும்.
முதல் தளத்தில் பஸ்கள் நிறுத்துவதற்காக 98 நடைமேடைகள் அமைக்கப்பட உள்ளன. 2-வது தளத்தில் கார், பைக் நிறுத்துவதற்காக இடம் ஒக்கப்பட உள்ளன. மின்சார பஸ்கள் சார்ஜ் வசதி செய்யபட உள்ளது.
அரசு போக்குவரத்து கழக அலுவலகம் உணவகங்கள் கடைகளும் 3-வது தளத்தில் மின் மேலாண்மை அலுவலகம், சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது.
4 முதல் 7-வது தளங்களில் வணிக வளாகங்களும் 8 முதல் 10 மாடி வரை வங்கிகள் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளது. 10-வது மாடியில் ஹெலிகாப்டர்கள் நிறுத்துவதற்கான ஹெலி பேட் அமைக்கப்பட உள்ளன.
பஸ் நிலைய கட்டுமான பணி தொடங்கியவுடன் 3 இடங்களில் பஸ் நிலையங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளது.
ரெயில் நிலையத்தில் இருந்து பயணிகள் நேரடியாக பஸ் நிலையம் வருவதற்காக ஸ்கை வாக் அமைக்கப்படும். இந்த பஸ் நிலையம் நுழைவு வாயில் திருப்பதி கோவிலை போன்று வடிவமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.