இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு அளித்தது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு துருக்கி ட்ரோன்கள் மற்றும் ராணுவ உதவிகளை வழங்கியது.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய துருக்கி அதிபர் எர்டோகன், "பாகிஸ்தான் எங்களின் உண்மையான நண்பன் என்றும், எதிர்காலத்தில் அந்த நாட்டிற்கு நாங்கள் தொடர்ந்து துணை நிற்போம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு அளித்ததற்கு இந்திய மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதனால் துருக்கியில் உள்ள இனோனு பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தங்களை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் முறித்துக் கொண்டது.
இந்நிலையில், துருக்கிய பல்கலைக்கழகங்களுடனான தனது ஒப்பந்தங்களை ஐஐடி பாம்பே முறித்து கொண்டுள்ளது.
இது தொடர்பாக ஐஐடி பாம்பே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "துருக்கி சம்பந்தப்பட்ட தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலை காரணமாக, மறு அறிவிப்பு வரும் வரை துருக்கிய பல்கலைக்கழகங்களுடனான ஒப்பந்தங்களை ஐஐடி பாம்பே நிறுத்தி வைக்கிறது" என்று பதிவிட்டுள்ளது.