ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் புகழ் பெற்ற சார்மினார் பகுதி இருக்கிறது. இங்குள்ள குல்சார் அவுஸ் அருகே 3 மாடி கட்டிடம் உள்ளது.
இந்த கட்டிடத்தின் கீழ் பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணா பியர்ல்ஸ் என்ற நகைக்கடை உள்ளது. இந்த கட்டிடம் நெருக்கமாக கட்டப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் நகைக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தரை தளத்தில் இருந்த தீ மேல் தளங்களுக்கு வேகமாக பரவியது. இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மொகல்புரா, கவுலிகுடா பகுதியில் இருந்து 11 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் நெருக்கம் நிறைந்த பகுதியாகும். இதனால் தீ யணைப்பு வீரர்கள் வருவ தற்கு சிரமம் ஏற்பட்டது. மேலும் கட்டிடத்தின் பெரும்பாலான பகுதியை தீ ஆக்கிரமித்ததால் அங்கிருந்தவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து அருகில் இருந்த வேறொரு கட்டிடத்தில் இருந்து தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சென்றனர். இருப்பினும் மேல் தளங்களில் கடுமையாக தீ பரவியதால் தீயில் சிக்கியும், புகை மூட்டத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டும் குழந்தைகள் உள்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜேந்திர குமார், அபிஷேக், சுமித்ரா, முன்னிபாய், ஷீத்தல், ஆருஷி, ரஜனி அகர்வால், அன்யா, பங்கஜ், வர்ஷா, ரிஷப், பிரதம் அகர்வால், பிரம்ஸ் அகர் வால் மற்றும் 2 வயது குழந்தை ராஜ், 7 வயது சிறுமி ஹர்ஷாலி குப்தா. இறந்தவர்களில் 4 பேர் பெண்களாவர்.
10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சார கசிவினால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
புகை மூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த பகுதியில் வசித்தவர்கள் சுவாசிக்க பெரிதும் சிரமப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளை தாமதப்படுத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினா். தீயணைப்பு துறைக்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என்றும், இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
3 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி, தெலுங்கானா மந்திரி பொன்னம் பிரபாகர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
கிஷன் ரெட்டி கூறும்போது, இந்த சம்பவம் மிகவும் வேதனையானது. பிரதமர் மோடியுடன் பேசி இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எல்லா வகையிலும் உதவி அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார். இந்த தீ விபத்து சம்பவம் தனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத் தீ விபத்தில் பலியான குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.