ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்
இதற்கு கடந்த 7-ந் தேதி ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்து பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து இருநாடுகள் இடையே மோதல் அதிகரித்தது.
பாகிஸ்தானும் இந்தியாவை தாக்க முயன்றது. அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதோடு இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன.
4 நாள் சண்டைக்கு பிறகு இருநாடுகளும் சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டதை அடுத்து இரு நாட்டின் எல்லையில் தற்போது அமைதி நிலவி வருகிறது.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் இன்று முடிவடைவதாக தகவல் வெளியான நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் தொடரும் என்று மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, "டி.ஜி.எம்.ஓக்களின் (ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்) பேச்சுவார்த்தையின்போது முடிவு செய்யப்பட்ட போர் நிறுத்தத்திற்கு காலாவதி தேதி எதுவும் இல்லை. இன்று இந்தியா- பாகிஸ்தான் டிஜிஎம்ஓக்களுக்கு இடையே எந்தப் பேச்சுவார்த்தையும் திட்டமிடப்படவில்லை" என்று தெரிவித்தார்.