கர்நாடகா முழுவதும் பலத்த மழை - 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது

 பெங்களூரு:

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கி கொட்டி வருகிறது. குறிப்பாக மலையோர மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை இடைவிடாமல் கொட்டி வருகிறது. இதன் காரணமாக ஆறுகள், நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

இந்த நிலையில் தட்சிணகன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, மற்றும் சிக்கமகளூரு, ஹாசன், குடகு, சிவமொக்கா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் பலத்தமழை கொட்டி வருகிறது. இதனால் அந்த மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. மேலும் மலையோர மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் மழை காரணமாக கர்நாடகாவில் உள்ள பல்குனி ஆறு, குமாரதாரா ஆறு, நேத்ராவதி ஆறுகளிலும் தண்ணீர் இருகரைகளை தொட்டப்படி கரைபுரண்டு ஓடுகிறது. கர்நாடகாவில் கொட்டி வரும் மழை காரணமாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள குடகு மாவட்டத்தில் கொட்டி வரும் மழையின் காரணமாக கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி, ஹாரங்கி, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

கர்நாடகாவில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தட்சிண கன்னடம் மாவட்டம் புட்டிகே அருகே எருகுண்டி நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியை பார்க்க சென்ற சுற்றுலா பயணிகள் 6 பேர் பலத்த மழை காரணமாக பாறையில் சிக்கி கொண்டனர். இதையடுத்து அவர்களை உள்ளூர்வாசிகள் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து வடக்கு கர்நாடகாவின் மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

மழை காரணமாக மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவில் உள்ள எச்சகள்ளியில் மின் கம்பியை மிதித்த சித்தராஜூ (55), என்பவர் பலியானார். இதே போல் பெலகாவி மாவட்டம் கோகாக்காவின் மகாலிங்கேஷ்வர் காலனியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கிருத்திகா நாகேஷ் பூஜாரி என்ற 3 வயது சிறுமி பலியானார். 



Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form