ஜம்மு:
ஜம்மு காஷ்மீரின் அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தைத் தரிசிக்க வருடத்தின் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்தப் பனிலிங்கத்தைத் தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி ரக்ஷா பந்தன் அன்று முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரைக்கு இதுவரை 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
யாத்திரை வருபவர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஜம்மு காஷ்மீர் அரசு செய்யும். அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் படிப்படியாக குறைந்து எல்லைப்பகுதியில் இயல்பு நிலை திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.