ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தது. இதனால் பாகிஸ்தான் வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்த பாகிஸ்தான் தடைவிதித்தது.
இந்த நிலையில் நள்ளிரவு 1.05 முதல் 1.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் இந்திய முப்படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் வான்வெளியை மூடியுள்ளது. இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி (பாகிஸ்தான் ராணுவ தலைமையகம்) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டு விமானங்கள் உள்பட அனைத்து விமானங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவசரநிலைக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கிடையே இந்தியாவின் அதிரடி தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் அது பதிலடியாக இருக்காது. பதற்றத்தை அதிகரிக்கும் என ராணுவம் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை சந்தித்து பாகிஸ்தான் கொடுக்க வேண்டிய பதிலடி குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.