ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக நள்ளிரவு 1.05 முதல் 1.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் இந்திய முப்படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதிகள் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது. 9 முகாம்கள் மீது 26 முறை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் கூறுகையில் "இந்தியா நள்ளிரவு நடத்திய வான்தாக்குதல் திட்டமிட்ட செயலாகும். ஆனால் உண்மை என்ன? என்பதை காலம்தான் பதில் சொல்லும்.
இந்தியா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக நேற்றிரவு 10 மணிக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைக்க பெற்றோம். அந்த நேரத்தில் கூட பாகிஸ்தான் நிதானத்தை கடைபிடித்தது என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.
பாகிஸ்தான் மண்ணில் தாக்குதல் நடத்தும் போர் விமானங்களை மட்டும் டார்கெட் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால்தான் ஐந்து விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது. உத்தரவு வேறு மாதிரி இருந்திருந்தால் 10 முதல் 12 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியிருப்போம்" என்றார்.