பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதன் பின்விளைவாக இந்திய அரசினால் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடுமையான மோதல் நிலை உருவானது.
பின்னர், இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தையடுத்து இந்த மோதல் நிலை குறைவடைந்தது. இருப்பினும், இந்த ஆபரேஷன் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், மோதலின்போது பாகிஸ்தான் இராணுவம் இந்தியாவுக்கு எதிராக சீனாவிடம் இருந்து பெற்ற சில ஆயுதங்களை பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, பாகிஸ்தானின் இராணுவப் பயன்பாட்டில் இருந்ததாகக் கூறப்படும் சீனாவின் அதிநவீன ராக்கெட்டானPL-15E ஏவுகணை வெடிக்காமல் இந்திய ராணுவத்தின் வசம் கிடைத்ததாக செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக சீனாவின் பாதுகாப்புத் துறை செய்தி தொடர்பாளர் சாங் சியோகாங் அளித்த ஊடக சந்திப்பில், பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக சீன ஆயுதங்களைப் பயன்படுத்தியதா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்தார்.
அதே சமயம், இந்திய ராணுவம் கைப்பற்றியதாகக் கூறப்படும் ஏவுகணை குறித்து அவர் பதிலளிக்கும்போது, “நீங்கள் குறிப்பிட்ட ஏவுகணை ஒரு ஏற்றுமதி உபகரணமாகும். இது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சிகளில் பலமுறை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
சீனாவும் பாகிஸ்தானும் பாதுகாப்புத் துறையில் நீண்டகால கூட்டாண்மையை கொண்டுள்ள நிலையில், இந்த விவகாரம் மேலும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.