கர்நாடகா மாநிலம் குடுப்பு கிராமத்தில் பாத்ரா கல்லூர்த்தி கோவில் அருகே கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் உள்ளூரைச் சேர்ந்த 10 அணிகள் பங்கேற்று விளையாடிள்ளன. இதனால் 100-க்கும் மேற்பட்டோர் அந்த இடத்தில் குவிந்திருந்தனர். அப்போது அஷ்ரப் என்பவர், பாகிஸ்தான ஜிந்தாபாத் என கோஷமிட்டுள்ளார்.
தற்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோசம் எழுப்பிய அஷ்ரஃப்-ஐ அங்கு கூடியிருந்த இளைஞர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அஷ்ரஃப் படுகாயம் அடைந்து, மருத்தவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த அஷ்ரஃப் கேரளாவின் வயநாடு மாவட்டம் சுல்தான் பதேரி தாலுகா புல்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக நிருபர்கள் கேட்ட கேள்விக்கு சித்தராமையா அளித்த பதில் பின்வருமாறு:-
பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோசம் எழுப்பப்பட்டிருந்தால், அது யாராக இருந்தாலும் தவறு. விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அறிக்கை வரட்டும். யாருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தெளிவாகிவிடும். பாகிஸ்தானுக்கு எதிராக யார் பேசியிருந்தாலும் அது தவறு. அது தேச துரோகத்திற்கு சமம்.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
கேரள மாநில வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டது குறித்து கர்நாடக மாநில போலீஸ் துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வரா கூறியதாவது:-
மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வரகிறது. தற்போது சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாங்கள் இந்த சம்பவத்தை மிகவம் தீவிரமானதாக எடுத்துள்ளோம். கிரிக்கெட் விளையாட அந்த இடத்திற்கு ஏராளமானோர் சென்றுள்ளனர். தகவல் சேகரிக்க அவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும். விசாரணை தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது.
இவ்வாறு பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.