புதுடெல்லி:
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் கிட்டத்தட்ட 2 ஆண்டை நெருங்கியுள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனாலும், இருதரப்பினரும் பரஸ்பர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, இஸ்ரேலின் முக்கிய விமான நிலையம் மீது ஏமனைச் சேர்ந்த ஹவுதி பயங்கரவாத அமைப்பினர் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் உயிர்ச்சேதம் ஏற்படாத நிலையில், சாலைகள், வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஹவுதி ஏவுகணையை தாக்கி அழிப்பதில் ராணுவம் தோல்வியடைந்து விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க தயாராக இருந்த ஏர் இந்திய விமானம், கடைசி நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக அபுதாபிக்கு திருப்பி விடப்பட்டது.
டெல் அவிவ் நகரில் இருந்து டெல்லி இயக்கப்பட இருந்த விமானத்தையும் ரத்துசெய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.